உயிர்வேலி...

 உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த உயிர்வேலியானது மண் அரிப்பை தடுத்தும்,பண்ணையாளரின் அனுமதி இல்லாமல் வாயிலை தவிர வேறு வழியில் வெளி ஆட்கள் பண்ணையின் உள்ளே நுழைய இயலா வண்ணம் அமைந்த ஒரு முள் வேலியாகவும், பல உயிர்கள் வாழும் இடமாகவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் ஒரு உணவு தொழிற்சாலையாகவும், மனிதர்களின் பழத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு உணவுக்காடாகவும், கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனமாகவும், விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும், பசுந்தாள் உரத்திற்காகவும், பருத்தியின் மூலம் உடை தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும் மூலிகைகள் அடங்கிய மூலிகைக்காடாகவும் பயன்படுகிறது.


வீட்டு தோட்டம் அமைப்பவர்களுக்கான உயிர்வேலி


பாச்சான், கொட்டைச் செடி, கள்ளி,அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)


விவசாயம் செய்பவர்கள் ஐந்து அடுக்கில் இயற்கை வேலி அமைப்பது நல்லது. அவர்களுக்கான வழிமுறை


முதல்வரிசை முள் நிறைந்த வேலி மற்றும் உணவுபொருள் மற்றும் ஆட்டுத்தீவனம்

இலந்தை, களாக்காய், (கிளக்காய்),கோணக்கா (கொடுகழிக்கா அல்லது கொடுக்காய் அல்லது கொடுக்கா புள்ளி), காரை முள், சூரை முள்,வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல்,குடைவேல்,காக்கா முள், சங்க முள், யானைக்கற்றாழை.,,,(இன்னும் சில)


இரண்டாம் வரிசை பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் மனிதர்களுக்கான உணவுக்காடு

ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சிங்கப்பூர் செர்ரீ (சர்க்கரை பழம்), வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, பேரீச்சை, ஈச்ச மரம், நெல்லி, புளிய மரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், பேரிக்காய், எலுமிச்சை, விளாம் பழம்,பாதாம், தென்னை, பனைமரம்,பாக்கு மரம்.,,,(இன்னும் சில)


மூன்றாம் வரிசை வருங்கால வைப்பு நிதி மற்றும் விறகு மற்றும் பசுந்தாள்உரம் மற்றும் வனக்காடு

சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு,குமிழ், வேங்கை, புங்கை மரம், புன்னை மரம், வேங்கை, கடம்பு,தீக்குச்சி மரம், வாகை,சந்தனம் ,தேக்கு,ரோஸ்வுட் ,செஞ்சந்தனம் ,கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சணத்தி, பூவரசு, மகிழ மரம், வன்னி மரம்,.,,,(இன்னும் சில)


நான்காம் வரிசை கால்நடை தீவனம்

அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)


ஐந்தாம் வரிசை மூலிகை மற்றும் பூச்சிவிரட்டி மற்றும் உணவுபொருட்கள்

அன்னாசி பழம், பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைகீரை, கருவேப்பிலை,கோவக்காய், திராட்சை (முடிந்தால்), வெற்றிலை, செம்பருத்தி ,வெட்டி வேர், லெமன் கிராஸ்,கற்பூர வள்ளி (ஓம வள்ளி), பூனை மீசை, மருதாணி, சோற்றுக்கற்றாழை,நிலவேம்பு ,சிறியா நங்கை, பெரியாநங்கை,முசுமுசுக்கை, திருநீற்றுப்பச்சிலை ,துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி,கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை,நெய்வேலி காட்டாமணக்கு, ஆமணக்கு,எருக்கு,நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெறிஞ்சிமுள் ,வேலிப்பருத்தி.,,,(இன்னும் சில).


இட்டேரி என்பது உயிர்வேலிப் பாதை. இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, நடுவில் பாதை இருக்கும். கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் இந்த உயிர்வேலியில் நிறைந்திருக்கும்.


இவை விவசாய நிலங்களைக் காத்து வந்தன. இந்த உயிர்வேலியில் கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன.


கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன.


இந்த உயிர்வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.


பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.


விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத்தொடங்கி உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா குருவிகூட கூடுகட்ட முடியாத அளவிற்குக் கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம்.


உயிர்வேலி என்ற பெயரில், அங்கே நாம் வளர்க்கும் மரங்கள், செடிகள், கொடிகள், புதர்கள் என்று அனைத்தாலும் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஒன்றல்ல, இரண்டல்ல! முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன்.


பயன்கள் பட்டியல் இதோ


ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் தரும் மரங்கள் (சூபாபுல், கருவேல்) வளர்க்கலாம்.

மண்ணுக்கு வளம் சேர்க்க பசுந்தாள் உரம் தரும் செடி, கொடி, மரங்கள் (ஆவாரை, எருக்கு இலை, ஆடுதொடா இலை) வளர்க்கலாம்.

பாம்பு போன்ற விஷஜந்துகள் வீடு கட்டி, சந்தோஷமாக வாழ்ந்து நமக்கு தீமை செய்யும் எலி போன்ற உயிரினங்களை அழிக்கும் வகையில் புதர்களை வளர்க்கலாம்.

பக்கத்து வயல் பங்காளி வரப்பு வெட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க, அணைபோடலாம்.

அடையாளம் தெரியாத பறவைகளை ஈர்த்து, அவற்றுக்கு உணவு கொடுத்து (அத்தி, நாவல்) பண்டமாற்று மூலம் வெவ்வேறு விதைகள் மற்றும் எச்சங்களை உரமாகப் பெறலாம்

பயிர் பாதுகாப்புக்குப் புழு, பூச்சிகளைத் தின்னும் ஓணான் மற்றும் பறவைகளை ஈர்க்கலாம்.

காற்றானது நம் நிலத்துக்குள்ளே புகுந்து செல்லும்போது ஈரத்தை காவு கொண்டு சென்று விடாமல் தடுக்கலாம்.

புயல்காற்று போன்ற ஆபத்தான காலங்களில் காற்றின் வேகத்தை தடுத்து, சேதத்தைக் குறைக்கலாம்.

மழைக் காலங்களில் சத்துமிக்க மேல்மண் அரித்துச் செல்லாமல் தடுக்கலாம்.

வீட்டின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கலாம்.

கூந்தல்பனை பூ, ஈஞ்சி போன்ற அழகுப் பொருட்கள், வெள்ளெருக்கு பூ போன்ற பூஜை சாதனங்களைப் பெறலாம்.

அரப்பு, பூச்சை கொட்டைக் காய் போன்ற இயற்கை ‘ஷாம்புகள்’ தயாரிக்கலாம்.

மனிதர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் தேவை யான மூலிகைச் செடிகளையும், மரங்களையும் (நொச்சி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றுக்காக விளைநிலத்தை தனியாக ஒதுக்கத் தேவையிருக்காது) வளர்க்கலாம்.

கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை சரிகட்ட நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எந்தவித செலவோ, பராமரிப்போ இல்லாமல் பெறலாம்.

கற்றாழை போன்ற செடிகளை வளர்த்து, விவசாய வேலை இல்லாத நாட்களில் கயிறு திரிப்பது போன்ற வேலைகளை கொடுக்கலாம்.

எதிர்பாராத அவசரச் செலவுக்கு மரங்களை வெட்டி விற்றுச் சமாளிக்கலாம்.

இலையுதிர் காலங்களில் இலவசமாக வருடந்தோறும் மூடாக்குப் பெறலாம்.

தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும்போது வேலி ஓரங்களில் நடந்தால் தூய்மையான பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) சுவாசித்து, உடல்நலத்தை மேம்படுத்தலாம்.

தேனீக்கள் போன்றவை இருந்தால், தோட்டத்துக்கு மகரந்தம், நமக்கு தேன் என நன்மைகளைப் பெறலாம்..

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan