மோர் இன்றி அமையாது உலகு Healthy Buttermilk

 மோர் இன்றி அமையாது உலகு🌿🙏☀️🌵


நீர்சுருக்கிமோர் பெருக்கி நெய்உருக்கி சித்தர்கள்வாக்கு*


கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது


குறுந்தொகையில்..


“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின்


சிறப்புகளைப்பார்ப்போம்:

செரிமானப்பாதைசீராக:


உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.


மருந்தாகும்மோர் :


கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.


திரிதோஷசமனி :


மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


நீர்சுருக்கிமோர்பெருக்கி:


கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.


அனுபானம்:


மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.


வெயில்காலங்களில் :


வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.


நஞ்சகற்றி :


மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.


மோருடன்வரவேற்போம்:


ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.


🌿

ருதம்பராயோகாகோவை

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan